முகப்புத்தகப் (பேஸ்புக்) பதிவுகள் இப்போதெல்லாம் வாகனங்களின் இரைச்சல்களும், ஹோர்ன் சப்தங்களும் இருண்ட புகைகளும் இல்லை. மற்றும் கோயில்களின் மணியோசை, பள்ளிவாசல்களின் பாங்கு ஓசை, விகாரைகளில் கேட்கும் ஓசை, தேவாலயங்களின் மணியோசை கூட இல்லை. பாகுபாடுகளின்றி அனைத்தும் நிறுத்தப்பட்டு உள்ளன. ஆனால் சில பல வருடங்களாக மறந்து போன சிட்டுக் குருவிகளின் கீச்சிடும் ஒலிகளையும், வண்டுகளின் ரீங்காரங்களையும் இன்னும் பல பறவைகளின் ஒலிகளையும் கேட்கக் கூடியதாக உள்ளது. நானோ... நாமோ... ஏன், மனிதர்கள் என்ற ஒற்றைச் சொல்லிற்குள் ஒருமித்துப் போகும் அனைத்து உயிர்களும் இங்கு பல பிழைகளை செய்து விட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் இந்த மண்ணானது மனிதர்களுக்கு மட்டுமே என்று, இயந்திரமாக இயங்கி பகுத்தறிவைப் பயன்படுத்தாது பேராசைப்பட்டு வாழ்ந்து விட்டோம். நாமே, நாம் மட்டுமே அனுபவித்து மகிழ்ந்த இவ்வுலகில் பிற உயிர்கள் எங்களுக்கும் பங்கு உண்டு என்பதை மறந்து விட்டோம். சிறு வயதில் சமயப் பாடப்புத்தகங்கள் கற்றுக் கொடுத்ததும் என்ன? உன்னைப் போல் பிறரையும் நேசி என்று தானே... எத்தனையோ உயிர்களை இப்போது வரை இழந்து விட்டோம். நினைத்தாலே வருத்தமாக உள்ளது. எம் மனிதர்களுக்காக, மிக விரைவிலேயே இந்த கொரோனா நோய்த் தொற்றுக்கு தீர்வு கிடைக்க வேண்டும்; எம் மக்கள் எல்லோரும் காப்பாற்றப்பட வேண்டும் என்றெல்லாம் நானும் தெய்வங்களை தொடந்து வேண்டிக் கொண்டே இருக்கின்றேன். இதே போன்று எத்தனை பேர் இப்போது தங்களது நம்பிக்கைக்குரிய தெய்வங்களை வணங்கிக் கொண்டிருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள்? மத நம்பிக்கை அற்றவர்கள் கூட இப்போதாயினும் ஏதோ ஒரு தெய்வத்தை வணங்கிக் கொண்டு தானே இருப்பார்கள். சிறு பூச்சியினங்களுக்கும் சிறு புள்ளினங்களுக்கும் விலங்குகளுக்கும் இன்று நிம்மதியாக வாழ்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அனைத்து உயிர்களையும் நேசி என்றல்லவா எல்லா மதங்களும் கற்றுக் கொடுக்கின்றன. ஆகையால் அவற்றை சிறு அன்புடனாவது அன்பு மனங்களுடனாவது அனுமதிப்போம். புரிகிறது... பல குடும்பங்கள் இக்கொடிய தொற்றினால், இவ்வூரடங்குகளால், முடக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில காலங்களுக்கு சட்டத்தை அனுமதித்து நடப்பதை துன்பகரமான ஒன்றாக நீங்கள் நினைத்தீர்களேயானால் இறப்பினால் வரும் துன்பம் அதை விடக் குறைவானதொன்றல்ல... அதிர்ஷ்டவசமாக விரும்பியோ விரும்பாமலோ ஒரு மனிதரானவர் இன்னொரு மனிதர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொள்ளும் நிலை இன்று உள்ளது. இம்மனநிலை நீடிக்குமேயானால், ஒவ்வொரு மனிதருள்ளும் நிலை கொள்ளுமேயானால் நாம் இதுவரை சேர்த்துக் கொண்ட பாவக் கணக்குகள் கூட கழிக்கப்படலாம். மதங்களை, அவை கூறும் வழிமுறைகளை நேசியுங்கள். அவை கூறும் தர்ம நெறிகளை நேசியுங்கள், தவறு செய்யும் மனிதர்களைக் கூட மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். எனவே இம் முடங்கியுள்ள உலகில் முடிவற்ற பொழுதில் தெளிவற்று வாழாமல், குடும்பமாய் கூட்டுக்குள்ளேயே சிறை போன்று இருக்க விழைந்ததை எண்ணிக் கலங்காமல் சிறு கணமேனும் அன்பைப் பகிர்ந்து சிறு உயிர்களையும் நேசிக்கப் பழகிக் கொள்ளுங்கள். எல்லோர் நன்மைக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். ஏனெனில் இதுவும் கடந்து போகும்; எதுவும் நிரந்தரமல்ல...நாளை விடியும் போது கூட இத்துன்பத்துக்கு விடிவோ, விடுதலையோ கிடைக்கலாம். பொறுமையாக இருந்து நன்னெறிகளின் படியே வாழ்வோமாக. ~நன்றி
Theepa Theeshia