கவிதை மண்ணுக்கு இரையாகும் மானிடா ! - உன் கண்ணுக்குள் ஏன் இத்தனை காயங்கள் கனவுகள் சுமந்திடும் கருவிழியில் காரிருள் சூழ்ந்திருப்பது ஏனோ ? பூமியின் பயங்கரம் தானோ ! சிறை வாசலில் தினமும் சனத்தொகை நிரம்பி வழியுது அறிவாயோ ? நீ மன்னிக்கத் தவறியவன் வாழ்க்கை அங்கே அழியுது தெரிவாயோ ? மன்னித்துவிடு மனிதம் ஓங்கட்டும் . தீயில் சுட்டுவிட்ட புண்ணிற்கு மருந்திடுகிறாய் - உன் சொல்லில் பொசுக்கிய நெஞ்சிற்கு எதை இடப்போகிறாய் ? உன் கோபம் உனையே கொன்றுவிடும் பொறுமை கொள் மானிடா ! அன்பின் வறுமை கொடியது அறிந்துகொள் . காட்டினுள் வாழும் விலங்குகள் கூட்டம் அறிவாய் அவை தன்பாட்டினில் இருப்பது தெரிவாயோ ? நாட்டினுள் மட்டும் ஏன் இத்தனை உயிர்பலி அத்தனையும் மதவேற்றுமை தானோ ! உன் வீட்டினுள் மட்டும் மதம் கொண்டாடிடு வெளியினில் மனிதனாய் நடமாடிடு . மனிதம் எங்கெனத் தேடுகிறாயா ? உன் மிருகச்செதிலினுள் ஔிந்திருப்பதை அறியாமலே ! உன்னில் மாற்றங்கள் பல இன்றே செய்துவிடு ஏற்றங்கள் நாளை பெற்றிடுவாய் உன் புனிதம் அதனை காத்துவிடு தீமை நெருப்பு அணைந்துவிடும் மனிதம் இங்கே மீண்டுவிடும்..
Abdul Cafoor Fathima Faseeya