சுதந்திரம் என்பது பிறரை அழிக்கவோ தேவா? இறைவனே!நீரோ உருவிலாய் இரக்கமும் அன்புமே உன் வடிவம்! படைப்புகள் யாவுமே உன்னாலே படைத்தவை எல்லாம் சரிசமமே! கறுப்பென்றும் சிவப்பென்றும்; சாதியோ பேதமோ ஏதுமிலாய்; உன்னை அடைதற்கே மனிதன் மார்க்கம் தேடினான்; அதையே அவன் மதமென்கிறான்! அன்பின் வடிவமே! உனமேலே நம்பிக்கை வைத்தாலே நீ கடவுள்! நம்பிக்கை அற்ற பேர்தாமும் மதமதமென்றே மோதிக்கொண்டு வம்புகள் பண்ணி சீரழிந்து யுத்தங்கள் புரிந்து, பல்லாயிரம் இன்னுயிர் வாங்கி வெறிகொண்டு இன்றும் அலைகிறார்..... நீயறிவாய்! சுதந்திரம் என்பது... பொறுமையின் இருப்பிடமே! உன்னை புரியாத பேரெல்லாம் உனக்கு ஒருநூறு பேர்வைத்தார்! ஓராயிரம் பொய்கள் உன் பேரால் புனைந்துரைப்பார்! பொறுமையின் வடிவமே! உன் மக்கள் பொறுமையே இன்றி திமிர்கொண்டு பிரிவினை வளர்ப்பார்; தம்தம் சுயநலம் காக்கவே உன் பேருரைப்பார்! சுதந்திர புருசன் நீரன்றோ அடிமையாய் யாரையும் நீ படைத்ததே இல்லை; உன்பேரால் பேதங்கள் வளர்த்தார்; அமைதிப் படைப்பையே யுத்தபூமியாய் ஆக்கி கொலை வெறிகொண்டார்; உன் போல் பொறுமையே இல்லை அவர்க்கு! மனிதனை ஏன் படைத்தாய் தலைவா? சுதந்திரம் என்பது.... பொறுமையை இழந்தவன்; அன்பை அமைதியை எங்கே காண்பானோ? பெரும்பகை அழிக்க உன்னிடமே அருளையும் கேட்பார் இவனன்றோ! மடமை இதுபோல் வேறுண்டோ? மன்னிக்கத் தெரியாத கூட்டமிது அரும்பெரும் ஜோதியே! உன்நன் அன்பையார் கொண்டாரிங்கே? உன்மதம் அன்பே; உன் மார்க்கமோ உயிர்களெல்லாமே ஒன்றுடன் ஒன்று சேர்ந்தே வாழும் மேன்மை மிக்கதே; பொறுமையும் அன்பும் மன்னிக்கும் குணமுமே இல்லாதவர்க்கெல்லாம் மதமெதற்கு? ஒன்று மட்டும் உனை கேட்கிறேன்; சுதந்திரம் என்பதே பிறரை அழிக்கவோ தேவா? சுதந்திரம் என்பது... வேறு...அதர்மங்கள் ஆட்சிகொண்டால் அவனியில் அவலங்களே! இதை நீ மாற்றாவிட்டால் இறைவா! உன்னிருப்பு எதற்காமோ?