இனங்களோடு இணங்கி வாழ்வோம்! ************************************ பகுத்தறிவு ஜீவிகளே என்வணக்கம் பரஸ்பரம்நாம் அன்பு கொள்ள ஏன்சுணக்கம் மதம்சாதி இன பேதம் துயர் கொடுக்கும் மனிதமுடன் வாழ்ந்திடுவோம் ஜயம் கிடைக்கும் ஆதாமும் ஏவாளும் நம் தொடக்கம் அவர்களது பிள்ளைகள்தான் நாமனைத்தும் அடிப்படையில் நமக்கு வேண்டும் ஈவிரக்கம் ஆதலினால் பேணிடுவோம் நல்லிணக்கம் மனிதனென்ற வகையறாதான் நாமனைத்தும் மன்னிப்பு பொறுமையின்றேல் மன வருத்தம் நலிவடைந்து போகிறது இனநெருக்கம் நல்லிணக்கம் ஒன்றேதான் நமையுயர்த்தும் மதங்களை நாம் வழிபடுதல் பொது வழக்கம் மாறுவதும் சேருவதும் சுயவிருப்பம் யாரும்செய்யத் தேவையில்லை அதை திருத்தம் எவரும் வந்து விரல்நுழைத்தால் அது வருத்தம் எல்லோர்க்கும் ஓடுவது சிவப்பிரத்தம் ஏனெமக்குள் வளர்கிறது பகைமை நித்தம் இனங்களாலும் நிறங்களாலும் உலகில் யுத்தம் இதைவிடுத்து இணங்கி வாழ்வோம் வாழ்க்கை சுத்தம் போயும் போயும் மனித ஆயுள் நூறே உச்சம் புரிந்து கொள்வோம் எதுவுமேதான் இல்லை மிச்சம் உயிரைவிடப் பெரியதில்லை உலகே துச்சம் உணர்ந்து கொண்டு இணங்கி வாழ்ந்தால் இல்லை அச்சம் மதமனைத்தும் சொல்லுவது ஒன்றே ஆகும் மாற்றமில்லை கருத்தனைத்தும் நன்றே ஆகும் மதங்கள் சொன்ன நன்நெறியின் பின்னால் போவோம் மாநிலத்தில் மனிதம் காத்து ஒன்றாய் வாழ்வோம்! ஆக்கம். அ.கு.பாத்திமா பிறின்தாஜ்