மூன்று தலையங்களிலான கவிதைப் போட்டி. 1. மன்னிப்பு. 1. உலகினிலே உயிர் வாழும் மானிடர்க்கு உகந்தவோர் அருமைச் சொல் மன்னிப்பாகும் பல குணங்கள் கொண்டவர்கள் பாரினிலே பலவிதமாம் குற்றங்கள் செய்து வாழ்வார் நலத்தோடு அவையெல்லாம் மனதில் தாங்கி நல்லோராய் வாழ்கின்ற நல் மனிதர் பல்வேறு பாவங்கள் தம்மை எல்லாம் பார் போற்ற நல்மனத்தால் மன்னிப்பாரே 2. கோட்சேயின் குண்டைத்தன் நெஞ்சில் வாங்கி கோமானாம் மகாத்மா காந்தி அண்ணல் குற்றுயிராய் மண்மீதில் விழுந்த போதும் குற்றவாளி கோட்சேயை மன்னித் தாரே கோமகளாம் இந்நிரா காந்தி – தன்னைக் கொன்றவனை மன்னிக்கக் கூறி னாரே குலவிளக்காம் அவ்வன்னை கற்ற பாடம் கொலையுண்ட காந்தியிடம் பயின்ற பாடம் 3. அமெரிக்க நாட்டினிலே அடிமை வாழ்வை அடியோடு ஒழித்துவிட முயன்ற எங்கள் ஆபிரகாம் லிங்கனுந்தான் கொலை காரனை அப்பொழுதே மன்னித்தார் உல கறியும் அந்நாட்டின் ஜனாதிபதி ஜோன் கென்னடியும் அவரைக் கொன்ற பாதகனை மன்னித்தாரே ஆதிமுதல் அந்தம் வரை மன்னிப்பென்ற அருஞ்சொல்லை மறந்திடாது நாமும் வாழ்வோம் 4. இயேசுபிரான் தனைக் கொன்ற கொலைஞர்களை இதயத்துள் அன்பு பொங்க மன்னித்தாரே இவையிந்த உலகினிலே வாழும் மாந்தர் இதயத்துள் பதித்து இந்தச் சத்தியத்தை; இன்றுவரை உலகோரும் போற்று கின்றார் என்றுமே அழியாது இந்த உண்மை நன்று இதை நாமுந்தான் உளத்திருத்தி நானிலத்தார்க்கும் இதை ஓதி வைப்போம் 5. குற்றங்கள் செய்வதெலாம் மனித குணம் குறைவின்றி மன்னித்தல் தேவ குணம் கொற்றவனாம் தென்னாட்டின் பாண்டி மன்னன் கோவலனைக் கொன்றதற்காய் உயிர் துறந்தான் வெற்றி பெற்ற அசோகமா சக்கரவர்த்தி வீரமொடு கலிங்கத்தை வென்ற பின்னர் விழுந்தாரே புத்த மகான் காலடியில் விண்ணுலகும் மலர் மாரி பொழிந்ததுவே 6. மன்னிப்பு என்ற nhல்லை மறந்திடாது மாநிலத்தில் வாழ் மாந்தர் புனிதாகளாம் மன்னர் முதல் ஏழைவரை உலகினிலே மன்னித்த கதைகளை யாம் கேட்டிருந்தோம் விண்ணவர் போல் வாழ்க்கையினை வாழ்வதற்கு விலையற்ற மன்னிப்பை பிறர்க் களிப்போம் மண்ணகமும் விண்ணகமும் உள்ள வரை மானுடர் நாம் மன்னிப்பைப் பிறர்க்களிப்போம்! கவிஞர்: எம்.ஏ.எம்.ஆறுமுகம், 163ஃ92,தெக்கிந்த ரோட், பவ்வாகம, நாவலப்பிட்டிய. 2. சகிப்புத் தன்மை. உலகினிலே முதன்முதலில் சகிப்புத் தன்மை உருவாதல் தாய் என்னும் கோவிலில்தான் உருவமொன்றைக் குழந்தையாகத் தன் வயிற்றில் ஓர்பத்துத் திங்கள்வரை தான் சுமந்து உதிரத்தால் பாலுூட்டிக் குழந்தை தன்னை உயிரோடு உயிராக வளர்த் திடுவாள் உருவமது ஜனிக்கின்ற போது அத்தாய் ஒப்பற்று சகிக்கின்றாள் தெய்வத் தாயாய் பெற்றபிள்ளை பலகுறும்பு செய்யும் வேளை பேசாது அமைதியுடன் சகித்துப் பின்னர் உற்ற துணை யாகத்தான் நேசமுடன் ஒருபொழுதும் பிரியாது உட னிருந்து கற்ற கல்வியை பிறர்க்கு ஈனும்போதும் கலைமகளாம் சரஸவதியாய் அமைதி காப்பாள் நற்றமிழில் தாலாட்டுப் பாடல் பாடி நாள்தோறும் குழந்தைகளைத் துயில வைப்பாள் கூலிவேலை செய்து வாழும் தொழிலாளி கூலி கிடைக்கும் வரை சகித்திடுவார் ஆலைகளில் அவதியுறும் அருமைப் பெண்டிர் அல்லல் பட்டாலும் அதையும் சகித்திடுவார் காலை மாலை என்றுகூடப் பாராது கடும் உழைப்பில் ஈடுபடும் தோழர்களும் காசு கையில் கிடைக்கும்வரை சகித்திடுவர் கண்டபின்னர் பொருள் வாங்க ஓடிச்செல்வர் பிச்சை யெடுத் துண்கின்ற யாசகர்கள் பிடிஅரிசி கிடைக்கும் வரை சகித்திடுவர் உச்சிதமாம் பதார்த்தங்கள் இலை யெனினும் உளமகிழ்ந்து கிடைத்தவற்றை உண்டு வாழ்வர் நிச்சயித்த தண்டனையை அனுப விக்கும் நீசர்களும் விடுதலைக் காய் சகித்திடுவர் மெச்சுகின்ற கல்வியினைப் பெற்ற மாந்தர் மேற்செல்லும் வரை தாமும சகித்திவர் உலகமக்கள் இரட்சிப்பைத் தான் கருதி உலகோர்க்கு நற்செய்தி பகன்று வாழ்ந்த உத்தமனார் இயேசுபிரான் சிலுவைப் பாட்டை உள மகிழ்ந்து பொறுமையுடன் சகித்திருந்தார் உடலிருந்து செந்நீரும் கண்ணீருந் தான் ஓடிப் பெருக்கெடுத்த வேளை தனில் உலகாளும் கர்த்தரிடம் ஓங்கார மாய் உலுத்தர்களை மன்னிக்கவும் வேண்டி னாரே! சகிப்புத் தன்மை தானிருந்தால் உலகினிலே சுண்டை இல்லை சமாதானம் அரசோச்சும் அகிலமதில் போரில்லை அமைதி தோன்றும் அநாவசிய போர்க்கருவி தேவையில்லை பகலிரவு பாராது துயர்கள் தாங்கி படைதனிலே காவல் காக்கும் வேலையில்லை இகமதிலே சகிப்புத் தன்மை இருந்துவடின் இவ்வுலகம் சொர்க்கம் போல் ஆகிவிடும்.! கவிஞர்: எம்.ஏ.எம்.ஆறுமுகம், 163ஃ92, தெக்கிந்த ரோட், பவ்வாகம, நாவலப்பிட்டிய. 3.நம்பிக்கை 1. நம்பிக்கை என்பது மனிதகுல உயிர்நாடி நாடுகள் தேசங்கள் வாழ்வதுவும் வீழ்வதுவும் நம்புதல் என்னும் அடிப்படையிலாகும் - இது நாம்கண்ட அனுபவம் நல்லுலகும் அறியும்; நம்பினார் கெடுவதில்லை எனும் மந்திரம் நான்மறையின் தீர்ப்பென நானிலமும் அறியும் செம்படவன் தன்வலையை ஆழ்கடலில் வீசி சிறப்புடன் செயலாற்றல் நம்பிக்கை யில்தான் இல்லறத் துணைவனாம் கணவனை நம்பி நல்லறம் காத்திடும் நம்நாட்டுப் பெண்கள் நல்லதோர் ஆசிரியர் தனைநம்பி மாணவர் நற்கல்வி பெற்று உயர்கிறார் நாட்டில் உள்ளத்தில் உலகோரும் இறைவனை நம்பி உத்தம நெறியோடு வாழ்கிறார் புவியில் கள்ளமில் லாததோர் குழந்தைகள் போலே காவியந் தருகிறார் கவிஞர் இவ்வுலகில் விஞ்ஞானத் தொழில்நுட்பப் பொறியிய லாளரின் வியத்தகு சாதனைகள் நம்பிக்கை யால்தான் விண்ணகம் தனில்சென்று சாதனை படைத்தார் வெற்றியுடன் உலகிற்கு மீளவும் வந்தார் மண்ணகத்தில் தகைசார்ந்த மருத்துவ வல்லுனர் எண்ணறும்; உயிர் காத்தார் நம்பிக்கையால்தான் கண்ணற்ற மனிதர்க்கு கண்ணைப் பொருத்தி கண்பார்வை தருவதும் நம்பிக்கை யால்தான் நீர்வளம் இல்லாது போனாலும் விவசாயி நிலத்தடி நீர்நம்பி எம்பசி நீக்குவார் பாரினில் வெகுதூரம் நம்பிக்கை யோடு பாட்டாளிகள் எமக்குப் பாதைகள் தந்தார் காரிருள் தனில்கூட நம்பிக்கை யோடு காவலர்கள் நம்நாட்டைக் காத்திருக் கின்றார் ஏறுபோல் முப்படை வீரர்கள் எல்லாம் இணையற்ற நம்பிக்கையுடன் நாட்டைக் காப்பார் பொதுவுடமைச் சித்தாந்தம் தனைநம்பி லெனினும் புத்துலகக் குடியரசை சோவியத்தில் நிறுவினார் அத்தகைய பாதையில் மாஓவும் சென்று மக்கள் சீனமென்னும் பெருநாட்டை ஆண்டார் எத்தகைய துயர்வரினும் இதை நானுமேற்றே எந்நாட்டையும் பொதுச் சொத்தாக ஆக்குவேன் என்றெண்ணி நம்பிக்கையுடன் கியூபா நாட்டை ஏறுபோல் பிடல் கெஸ்ட்ரோ உருவாக்கினாரே! மனிதரை மனிதர்கள் நம்பியே வாழ்ந்தால் மாளாத சமாதானம் உலகில் உருவாகும் மண்மீதில் போர்தனை அறவே வெறுத்து மனிதாபி மானத்துடன் நம்பி வாழ்வோம் நானிலந் தனிலே நாடுக ளெல்லாம் நலமாக மானுடம் உயிர் வாழ்வதற்கு இனிமேலும் இறையோனை மறவாது நம்பி இனிதான சொர்க்கமாய் உலகை மாற்றிடுவோம்! கவிஞர்: எம்.ஏ.எம்.ஆறுமுகம், (ஓய்வுநிலை பொலிஸ் பரிசோதகர்) 163ஃ92, தெக்கிந்த ரோட, பவ்வாகம , நாவலப்பிட்டிய. தொலை பேசி இலக்கம்: 0776306301.