மலிந்து கிடக்கும் மதவாதமும் மறைந்து போகும் மனித நேயமும்: மனிதன் இன்று மதத்தினால் மிருகமாகிறான் ஆம் நிஜத்தினால் பிளவுற்று மறைந்து இருக்கும் பொருளிற்கு அர்த்தம் தேடுகிறான். இன்று உலகமே மதத்தின் பிடிக்குள் பிடியுண்டு மீள முடியாது தவித்துக் கொண்டிருக்கிறது. மனிதன், மதம் என்னும் போர்வைக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறான்; எப்போது மதம் என்னும் போர்வையை விலக்கி நிஜ வாழ்வினைக் கண்டு கொள்கிறோமோ அன்றுதான் நாம் நிஜ கடவுளைக் காண்போம் மனித நேய பண்புடன். இன்றுவரை யார் கடவுள், எந்த மதக்கடவுள், உண்மை என்பது யாராலும் விடை பெற முடியா வினாவாகி இருக்கிறது. இதற்கு அர்த்தம் தேடுகிறோமே தவிர இறந்து கொண்டிருக்கும் அயல் வீட்டு மனிதனை பார்க்க மறந்து விடுகிறோம் . இன்று மட்டுமல்ல அன்று தொட்டே மதம் மாபெரும் போராட்டமாக இருந்து கொண்டே இருக்கிறது. நம் நாட்டில் அதாவது இலங்கையில் நான்கு மதங்களே காணப்படுகிறது. புத்தபெருமான்,சிவபெருமான்,இயேசுகிறிஸ்து,அல்லா இவர்கள் வாழ்ந்த காலங்கள் வேறாயினும் ஒரே பொருளையே போதிக்க முனைந்தனர் நம் மக்களிற்கு; அதுதான் "அன்பு" அனைவரையும் அன்பு செய்வோம் என்பதே, ஆனால் நாம் என்ன செய்கிறோம்? முரண்பாடுகளுடனான முகத்துடனும் வெளிவேட முகமூடி அணிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விட்டுக் கொடுத்தல், உதவுதல் என்பதெல்லாம் ஒரு பேசு பொருளாக காணப்படுகிறதே தவிர நிஜவாழ்வில் செயற்பாடாக காணப்படுவது அரிதாகக் காணப்படுகிறது. நாம் மதம் என்னும் மந்திரத்திற்குள் மயங்கி விடாது மனிதர்களை நேசிக்க கற்று கொள்ள வேண்டும். இன்று சிறு வயதிலிருந்தே போதிக்கப்பட்டு வருகிறது மத வெறியின் தூண்டுதல்; நான் மதமற்றவளாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் அனைத்து மதங்களையும் அவர்களின் நம்பிக்கையையும் ஒரு போதும் களங்கப்படுத்த நினைந்ததில்லை அதனையே நான் இங்கும் எனது எழுத்துக்கள் ஊடாக முன் வைக்க முனைகிறேன். அவரவர் மதக் கடவுளை தங்களது அன்பிற்கும் தேவைகளிற்கும் வேண்டிக் கொண்டு காணிக்கைகளை வழங்கும் நாம் அடுத்த மதங்களையும் மதித்து அவர்களின் நம்பிக்கையையும் உதாசீனம் செய்யாது மதிக்க கற்று கொள்வதுடன் அன்பினையும் வழங்க வேண்டும். வடமாகாணத்தில் மட்டுமல்ல இலங்கை முழுவதும் ஒரு கடவுளின் சிலை பொது இடத்தில் வைக்கப்பட்டால் மறுநாள் மற்றைய மதத்தின் சிலையும் அருகில் காணப்படும் அல்லது சிலை சிதைக்கப்பட்டு இருக்கும். இன்னும் நாம் புரிந்து கொள்ளவில்லை சிலைகளை வைப்பதனாலோ சிலைகளை மதம் மீதுள்ள கோபத்தினால் உடைப்பதனாலோ மனிதனிற்கு அனைத்தும் கிடைத்து மனிதன் முழு மனிதனாக வாழ்ந்து விடுவான் என்று, அடுத்தவனை நேசி என்பதுவே அனைத்துக் கடவுளினதும் வேண்டுகாளே். ஆனால் நாம் அதை மட்டும் மறந்து விட்டோம் அல்லவா, நாம் புரிதலுடனான தெளிவினை பெற வேண்டும் என்பதே என் நோக்கம். மதங்கள் மனிதனை கெடுதலில் இருந்து நல்வழிப்படுத்தவே உருவாக்கப்பட்டதே அன்றி கொடூரமான மனித பிளவுகளை உருவாக்குவதற்காக அல்ல. இங்கு நான் மதங்களினால் ஏற்பட்ட ஒரு முரண்பாட்டினை உதாரணமாக முன் வைக்க விரும்புகிறேன். வடமாகாணத்தில் ஒரு மாவட்டம் அதில் தமிழர்கள் என இணைந்து வாழ்ந்த ஒரு சமூகம்; ஒரு இந்து, கிறிஸ்தவ ஆலயங்களின் இடப்பிரிவினையால் வந்த முரண்பாடு அதனால் இன்று இனம் மறந்து மத வெறியர்களாய் பிரிந்து ஒருவரை ஒருவர் முகம்பார்க்க முடியாதவாறு பிளவினை ஏற்படுத்தி விட்டது. இந்த முரண்பாட்டில் வழிநடத்தவேண்டியவர்களே தவறு விட்டதாக உணர்கிறேன். இரு மத தரப்பினரும் ஒரு பரஸ்பர பேச்சுடன் ஒற்றுமையை நிலைநாட்ட மறந்து விட்டனர் என்றே கூறுவேன். மனிதர்கள் நாம் சிந்திப்போம் மதத்தினால் உருவாகி கொண்டு செல்லும்அரசியல் நகர்வினையும் சிந்தையில் எடுத்துக் கொள்வோம் இப்போது மதம் அரசியலிற்கும், பணம் உழைப்பதற்குமான ஒரு ஊடகமே தவிர மனிதனை வழிநடத்தும் நல் போதகமாக பார்க்கப்படவில்லை. உலக நாடுகளே மதத்தினால் பிளவு படும் போது ஒரு இனமாக வாழும் நாமாவது மதம் கடந்து ஒரு ஒற்றுமையை நிலைநாட்ட முயல்வோம். எனவே மனிதர்களாகிய நாம் நிதானித்துக் கொள்வோம். மதத்தினால் மனிதனை சாகடிக்காது மதங்கள் கூறும் அன்பினை விதைப்பதோடு நாம் மறந்து கடந்து கொண்டிருக்கும் மனித நேயத்தைக் காப்பதோடு மதங்கள் அனைத்திற்குமான மரியாதையை எப்போதும் கொடுத்து இம் மானிடத்தில் அன்பு செய்யும் நல் மனிதர்களாக வாழ்வோம். "மதம் ஒரு போதும் மனிதனை மிருகமாக்கி விடக்கூடாது என்பதே எனது எண்ணத்தின் வெளிப்பாடு"